Tuesday, September 28, 2004

சிறு வயது சிந்தனைகள் - I

என்னவோ தெரியவில்லை? பொதுவாக, நம்மில் பலருக்கு, நம் பள்ளி/கல்லூரி நாட்களில் நாம் ரசித்துக் கேட்ட திரைப்பாடல்களும் அல்லது படித்த பாடங்களும் அல்லது கண்ட காட்சிகளும், அவற்றை நினைவில் கொள்ள நாம் பெருமுயற்சி எடுக்காதபோதும், நம் மனதில் ஆழமாக (உறக்கத்திலிருந்து எழுப்பிக் கேட்டால் கூறுமளவு!) பதிந்து விடுகின்றன. அதே சமயம், வேலைக்கு சென்று நான்கைந்து வருடங்களில், இந்த திறமை குறைந்து, போகப்போக காணாமல் போய் விடுகிறது! இதற்கு, வயது கூடும்போது ஏற்படும் ஞாகபக் குறைவு ஓரளவு காரணமாக இருப்பினும், எனக்கென்னவோ, தற்போது நம்மில் பலர் சந்திக்கும் வேலைச்சூழல் தரும் அழுத்தமும், நாம் வாழும் ஒருவித monotonous வாழ்க்கையும் நம் ரசிப்புத்தன்மையை மங்க வைப்பதால் இந்நிலை உருவாகிறது என்றே எண்ணத் தோன்றுகிறது!

என் நினைவில் இன்னும் வாழும் சில திரைப்பாடல் வரிகள்!
1. காலம் ஒரு நாள் மாறும், நம் கவலைகள் யாவும் தீரும்! சென்றதை எண்ணி அழுகின்றேன், வருவதை எண்ணி சிரிக்கின்றேன்!
2. காலடித் தாமரை நாலடி நடந்தால் காதலன் உள்ளம் புண்ணாகும்!
3. நான் காதலெனும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே, அந்த கவிதைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே! ... நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே, நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே, தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே, தெம்மாங்கு பூந்தமிழே, தென்னாடன் குலமகளே!
4. உன்னிரு கண்பட்டு புண்பட்ட நெஞ்சத்தில் உன் பட்டுக்கை பட பாடுகிறேன் ... பொன்னெழில் பூத்தது புது வானில், வெண்பனி தூவும் நிலவே நில்!
5. ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா, இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா!

நம்மில் திருமணமான பலருக்கு, குழந்தைகளுடன் செலவிட (வீட்டினுள்ளேயே, கேரம்,செஸ்,தாயம்,டிரேட் (Trade) விளையாட்டுக்கள் விளையாட) நேரம் கிடைப்பதில்லை. குழந்தைகளுக்கும் படிப்பு சம்மந்தப்பட்ட வீட்டு வேலை (HOMEWORK) இப்போதெல்லாம் அதிகம் இருப்பதால், ஒருவருடன் ஒருவர் மகிழ்ச்சியுடன் விளையாடுவது என்பதே அவர்களுக்கு அரிதாகக் கிடைக்கும் பரிசு போலாகி விட்டது. பல குழந்தைகள் கிடைக்கும் நேரத்தை தொலைக்காட்சி பார்ப்பதிலேயே செலவிடுகின்றன. நான் சிறுவயதில் (வறுமையிலும் கூட!) எவ்வளவு குதூகலத்துடன் விளையாட்டில் நேரம் கழித்திருக்கிறேன் என்று எண்ணிப் பார்க்கிறேன். பள்ளிக்காலங்களில், TV-யில் நான் பார்த்த நிகழ்ச்சிகள் "ஒளியும் ஒலியும்" (வெள்ளிக்கிழமை தோறும்) மற்றும் Wimbledon Tennis Final ஆகியவைகளே!

மெரீனா கடற்கரையிலும், திருவல்லிக்கேணி குளக்கரைத் தெருக்களிலும், வற்றிய குளத்திலும், அகண்ட மொட்டை மாடியிலும் ஆடிய கபடி, underarm cricket, கில்லி, பம்பரம், கோலி (குழி, பேந்தா!), குச்சியால் சைக்கிள் டயர் விரட்டும் விளையாட்டுக்களையும், வீட்டுக்கூடத்திலும் ரேழியிலும் திண்ணைகளிலும் ஆடிய chess, Trump, அதி வேக ஊஞ்சல் விளையாட்டுக்களையும் நினைத்துப் பார்க்கும்போது Real Nostalgia!! அதற்காக, நான் படிப்பிலும் சோடை போகவில்லை! படிக்க வேண்டிய சமயத்தில் படித்து, மிக நல்ல மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்றவனாகவே திகழ்ந்தேன். 25 வருடங்களுக்குப் பின்னும் பல ஆசிரியர்களுடன் உறவு தொடர்கிறது.

அந்நாட்களில், "BOMBAY TRADE" என்ற விளையாட்டு எங்களிடையே மிகவும் பிரபலம்! பம்பாயிலுள்ள இடங்களின் (Juhu, Versova, Marine drive, Santacruz, Dadar, Malabar Hill, Chowpathy, Zaveri Baazar, Kalpadevi, Parel, Pydoni, Fort, Shivri etc) பெயர்களுடன் கூடிய ஒரு அட்டையும் (board), செயற்கை பணமும் (நோட்டு மற்றும் நாணய வடிவத்தில்), dice மற்றும் வீட்டைக் குறிக்கும் பல நிறத்து சிறு பிளாஸ்டிக் வடிவங்களும் இவ்விளையாட்டுக்கு பிரதானமானவை. இரு ஜோடிகள் எதிராடலாம்! Dice-ஐ உருட்டி, உங்களைக் குறிக்கும் coin-ஐ நகர்த்தி, உங்களிடம் உள்ள பணத்தைக் கொண்டு இடங்களை வாங்கலாம். எதிராளியின் coin உங்களுக்குச் சொந்தமான இடத்திற்கு வர நேர்ந்தால், உங்களுக்கு அதற்கான வாடகை தர வேண்டும்! ஓரே நிறமுடைய 3 இடங்களுக்கு சொந்தக்காரராகி விட்டால், இரட்டிப்பு வாடகை தர வேண்டும்!! அதே சமயம், நீங்கள் அவ்விடங்களில் 1,2,3 வீடு கட்ட (உங்களிடம் உள்ள பணத்தை பொறுத்து!) தகுதி பெற்று விடுவீர்கள்! வீடு கட்டியிருக்கும் சமயம், எதிராளி அவ்விடத்திற்கு "வருகை" தந்தால் இன்னும் அதிக பணம் உங்களுக்கு தர வேண்டியிருக்கும்! சாதாரணமாக இந்த ஆட்டம், பரமபதம் போலவே, லேசில் முடிவடையாது. பணம் காலியாகி விட்டால், எதிராளியிடமிருந்தோ பொதுக்கணக்கிலிருந்தோ கடன் பெற்றுக் கொண்டு ஆட்டத்தைத் தொடரலாம். அக்காலத்தில், நாங்கள் 2-3 நாட்கள் தொடர்ந்து (board-ஐ இரவு வேளை அப்படியே கலைக்காமல் வைத்திருந்து!) Trade ஆடியிருக்கிறோம்! இக்காலத்தில், இந்த ஆட்டம் "BUSINESS" என்றழைக்கப்படுகிறது.

இக்கட்டுரையை, என் ஒன்பதாம் (பத்தாவதோ?) வகுப்பு தமிழ்ப்பாடத்தில் இடம் பெற்ற, என் நினைவில் இன்று வரை பசுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் பரிதிமாற்கலைஞரின் கடல் வாழ்த்துக் கவிதையோடு, நிறைவு செய்கிறேன்! கடல் நிலத்திற்கு முன்னோடி என்பதையும், காற்றை கடலின் காதலனாக மற்றும் மேகத்தை காற்றும் கடலும் சேர்ந்துருவாக்கிய ஆண்மகவாக உருவகப்படுத்தியும், கடல் எவ்வளவு கழிவை உள்வாங்கினாலும் பரிசுத்தமாக இருப்பதையும், மிக மிக அழகாக இக்கவிதை வாயிலாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

வாழியே கடலே, வாழியே கடலே!
உலகினுக்கியைந்த ஒரு துணைக்கருவியே!
அலகிலா உருவம் அடைந்தோய்!
நிலத்தினை ஆக்கி அன்புடன் காக்கும் பரவாய்!
உன்னை அடுத்து வந்துறு நாவாய்களை
நன்னர் செலுத்தும் நங்காய்!
நின்னிளங் காதற்றலைவனாம் மோது காற்றினால்
புனர் காரெனும் புனிற்றிள மகனால்
பயிர்த் தொகையோடு உயிர்த் தொகை மகிழ
தாவா இன்பம் தருந்தனித்தாயே!
ஓவா தொல்லென ஒலிக்குங் கடலே!
உந்தன் பெருமையுமுயர்வும்
துன்றுமடியின்மையும் தூய்மையும்
எந்தனால் எடுத்தியம்பலியலுமோ!!!

என்றென்றும் அன்புடன்
பாலா

9 மறுமொழிகள்:

Unknown said...

சரியாச்சொன்னீங்க பாலா.. அந்தநாளும் மறுபடி வந்திடாதோ.. என்னைப்பொறுத்தவரை பத்தாவதுக்கு முன்னாடி பிள்ளைகளைப்போட்டு இப்படி வாட்டி எடுக்கத்தேவையில்லை. நான் P.S. high schoolல தான் படிச்சேன். சென்னையில இருக்கறதால உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன். பத்தாவதுக்கு அப்புறம்தான் ரொம்ப சீரியஸா படிச்சு இப்போ கடல்கடந்து வர்ற அளவுக்கு வாழ்க்கைய அமைச்சுக்க முடிஞ்சது. என்ன.. கொஞ்சம் இங்கிலிபீஸ் அமர்க்களமா வராது. அதனாலென்ன, நமக்கு தேவையான language C தானே!

Chandravathanaa said...

பாலா

நீங்கள் சொன்ன அந்தப் பாடல் வரிகள் எனக்கும் முன்னர் அடிக்கடி ஞாபகத்தில் வருபவையே. தற்போது எங்கள் கவனங்கள் நாங்கள் சேர்த்துக் கொண்ட எங்கள் உறவுகளிடம் சிதறியதில், எமது உள்ளத்துள் உறைந்து கிடக்கும் சிந்தனைகளும் நினைவுகளும் அடிக்கடி மறந்து போய் விடுகின்றன.
அவைகளும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் நினைவில் வந்து ஒரு வித சந்தோசத்தை ஏற்படுத்தத் தவறுவதில்லை. இன்றைய உங்கள் பதிவைப் படித்த போது என்னுள்ளே சில நினைவுகள் எழுந்து சந்தோச அலைகள் அடித்தன.

பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்..

இப்பாடல் முழுமையாகவே
எல்.ஆர்.ஈஸ்வரியின் ஹம்மிங்குடன் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும்.

இதில் நீங்கள் குறிப்பிட்ட

பூமகள் மெல்ல வாய்மொழி சொல்ல
சொல்லிய வார்த்தை பண்ணாகும்
காலடித்தாமரை நாலடி நடந்தால் - இந்தக்
காதலன் உள்ளம் புண்ணாகும்

மறக்க முடியாத வரிகள்.

அடுத்து நீங்கள் குறிப்பிட்ட BOMBAY TRADE போன்ற விளையாட்டு Monopoly என நினைக்கிறேன். எனது பிள்ளைகள் இங்கு யேர்மனியில் விளையாடினார்கள். அவர்கள் பிள்ளைகள் இவைகளை விளையாடுவார்களா? என்பது கேள்விக் குறியே.

நட்புடன்
சந்திரவதனா

enRenRum-anbudan.BALA said...

சந்திரா,
என் "சிறு வயது சிந்தனைகள் - I" படித்ததற்கும், அது பற்றிய தங்கள் விமர்சனத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!
தங்களைப் போன்றவர்கள் நான் எழுதுவதைப் படிக்கிறார்கள், ரசிக்கிறார்கள் என்பதே நான் இன்னும் நிறைவாகவும்
நிறையவும் எழுத வேண்டும் என்ற உத்வேகத்தையும், ஆர்வத்தையும் எனக்கு அதிகப்படுத்துகிறது! உங்களுடைய
Blog-இல் உள்ள பல postings-ஐ படித்தேன், ரசித்தேன். குறிப்பாக, குழந்தைகள் பற்றிய தங்களின்
Blog-லிருந்து பல விஷயங்கள் அறிந்து கொண்டேன். "சிறு வயது சிந்தனைகள் - Part II" சமயம்
கிடைக்கும்போது முன்னதை விட சிறப்பாக எழுத முயற்சிக்கிறேன்.
என்றென்றும் அன்புடன்
பாலா

enRenRum-anbudan.BALA said...

ஐயா சிலந்தியாரே,
என் "சிறு வயது சிந்தனைகள் - I" படித்ததற்கும், அது பற்றிய தங்கள் விமர்சனத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி! தங்களைப் போன்றவர்கள் நான் எழுதவதைப் படிக்கிறார்கள், ரசிக்கிறார்கள் என்பதே நான் இன்னும் நிறைவாக நிறைய எழுத வேண்டும் என்ற உந்துதலையும், ஆர்வத்தையும் எனக்கு அதிகப்படுத்துகிறது! உங்களுடைய Blog-இல் உள்ள postings-ஐ படித்தேன், ரசித்தேன். குறிப்பாக, "மலரும் நினைவுகள் - 2 (பள்ளிக் குறும்புகள்)" படித்தவுடன், எனக்கு பள்ளியில் நேர்ந்த இதே போன்ற சம்பவங்கள் "ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே"!!! அவைகள் பற்றி, என் Blog-இல் எழுத உள்ளேன். "சிறு வயது சிந்தனைகள் - II" க்கு விதை விதைத்ததற்கு என் மனமார்ந்த நன்றி! தங்கள் Email-ID அறிய விருப்பம். என்னுடையது balaji_ammu@yahoo.com ஆகும்.
என்றென்றும் அன்புடன்
பாலா

Kannan said...

பாலா,

நல்ல பதிவு. மம்மத ராசா நாராசங்களுக்கிடையே நீங்கள் சொன்ன அந்தப் பழைய பாடல்கள் மனத்தில் தேனாய்ப் பாய்கின்றன. நன்றி!

//கபடி, underarm cricket, கில்லி, பம்பரம், கோலி (குழி, பேந்தா!), குச்சியால் சைக்கிள் டயர் விரட்டும் விளையாட்டுக்களையும், வீட்டுக்கூடத்திலும் ரேழியிலும் திண்ணைகளிலும் ஆடிய chess, Trump, அதி வேக ஊஞ்சல் விளையாட்டுக்களையும் நினைத்துப் பார்க்கும்போது Real Nostalgia!!//

உள்ளது!

dondu(#11168674346665545885) said...

I agree with you 100% about the film songs. One reason might be in those days we had no TV, only radio. With no visuals to distract, we could concentrate on the song and hence the memory.
I was born and brought up in Triplicane. This explains my desire to reply to your blog. I passed out from Hindu High School, Triplicane and wrote the SSLC exam in the year 1962. Could you please be more specific about your Triplicane days?
How do I type in Tamil in these blogs?
Regards,
N.Raghavan (Dondu)

enRenRum-anbudan.BALA said...

Mr. Raghavan,
You need to install "MURASU ANJAL" s/w for you to be able to type in Tamil. Once you install this, NOTEPAD will automatically display a '+Murasu' Tab. Using F12 key you could alternate between typing English and Tamil. Default encoding is "TSCII 1.7 Tamil". After typing your message in notepad, 'select all' and perform 'Convert Selection' to 'Unicode' to change the encoding type before posting the message so that it is properly viewable to other Bloggers. I finished my class XII from hindu high school in 1981. I used to stay in North Tank square st. Where are you residing currently?
regards,
BALA

Desikan said...

அருமையான பதிவு பாலா பேஷ் பேஷ்!
- தேசிகன்.

dondu(#11168674346665545885) said...

சுரதா அவர்கள் தயவில் நேரடியாக யூனி கோடில் தட்டச்சு செய்ய முடிகிறது. யூனி கோட் கருவியும் என் வன் தகட்டில் இறக்கிக் கொண்டுள்ளேன். இணையத் தொடர்பு இல்லாத நேரத்திலும் உபயோகிக்கலாம். ஆனால் என்ன, நத்தை மாதிரி நகரும். வலைப் பதிவு செய்யும் நேரம் இணையத் தொடர்பு உள்ளதால் இணையத்திலிருந்தே நேரடியாக அப்பக்கத்தைத் திறந்து மினிமைஸ் செய்துக் கொள்ளுகிறேன்.
திருவல்லிக்கேணி பற்றி. நான் பிறந்து 23 வயது வரை வளர்ந்த இடம். வெங்கடாசல செட்டித் தெரு 15-ஆம் நம்பர் என் நினைவில் ஆழப் பதிந்துள்லது. குடித்தன வீடுதான். இருந்தாலும் அது எனக்குப் பிடித்த இடம். இந்து உயர் நிலைப் பள்ளியில் படிப்பு நான்காம் வகுப்பு முதல் 11-ஆம் வகுப்பு வரை (1954 - 1962). புதுக் கல்லூரியில் பி.யூ.சி. கிண்டி பொறியியல் கல்லூரியில் பட்டப் படிப்பு.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails